ஒசூரில் வடமாநில தொழிலாளர் வெட்டிக்கொலை: இருவரை கைது செய்து போலீசார் விசாரணை
வடமாநில தொழிலாளர் நண்பர்களால் வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை கைது செய்து சிப்காட் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, சின்ன எலசகிரி பகுதியில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் அஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ராஜன் நவ்ரா. இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜன் நவ்ரா தனது நண்பர்களான அஸாம் மாநிலம் கச்சார் மாவட்டம், லக்கியூரை சேர்ந்த கிஷாந்த், அஜய் தாந்தி ஆகியோருடன் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ராஜன் நவ்ரா ஒசூரில் தங்கியிருப்பதால், உள்ளூரை சேர்ந்த பலர் எனது நட்பில் இருப்பதாக கூறி இருவரையும் அவ்வபோது மிரட்டி வந்ததாகவும், மேலும் அவர்களிடம் பெற்ற ரூ.1000 கடனை கேட்டதற்காக கொலை செய்து விடுவதாக ராஜன் நவ்ரா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நாளுக்குநாள் ராஜன் நவ்ராவின் மிரட்டல் அதிகரித்ததால், நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியபோது இரண்டு நண்பர்களும் ராஜன் நவ்ராவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இந்நிலையில், ராஜன் நவ்ராவின் மனைவி அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலிசார் கிஷாந்த், அஜய் தாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.