ஓசூர் மாநகராட்சியில் தடுப்பூசி முகாம் - அதிகாலையில் ஆர்வத்துடன் மக்கள் காத்திருப்பு
ஓசூர் மாநகராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.;
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த ஓசூர் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு பொது மருத்துவமனை மற்றும் சீதாராம் மேடு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 12 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சீதாராம் மேடு தடுப்பூசி செலுத்தும் மையத்தில் காலை 7 மணி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. பின்பு காலை 9 மணியளவில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சீதாராம் மேடு தடுப்பூசி மையம் முன்பு, அதிகாலை காலை 5 மணி முதலே வரிசையில் நின்று டோக்கன் பெற்றுச் செல்கின்றனர். இவர்களில் அதிகம் பேர், தொழிற்சாலைகளில் பணியாற்றும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க்கது.
ஓசூர் சீதாராம் மேடு தடுப்பூசி மையம் உட்பட மாநகராட்சிக்கு உட்பட்ட 12 மையங்களிலும் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதலாகத் தடுப்பூசி மையங்களைத் திறக்க, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபற்றி சீதாராம் மேடு ஆரம்ப சுகாதார நிலையப் பொறுப்பாளரும், ஓசூர் வட்டார மருத்துவ அலுவலருமான மருத்துவர் விவேக்கிடம் கேட்டபோது, ஓசூர் வட்டத்தில் உள்ள ஒரு அரசு பொது மருத்துவமனையிலும், 11 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து மையங்களிலும் இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.