கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஓசூரில் அவைத்தலைவர் தலைமையில் இன்று நடைப்பெற்றது.;
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி மற்றும் கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை ஆகிய 2 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதே போன்று தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் 2 பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள வட்டச் செயலாளர், மேலவைப் பிரதிநிதிகளை ஆகியோரை தள்ளி வைத்துவிட்டு, ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் தேர்வு செய்து அவர்களின் பெயர் பட்டியலை 4 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு வார்டாக அழைத்து பேசுவோம். அப்பொழுது ஒவ்வொரு வார்டிலும் வார்டு மறுசீரமைப்பு, வார்டில் உள்ள குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் கால்வாய் பிரச்சினை, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் பணிகள் முறையாக நடைபெறவில்லை. எனவே மாநகராட்சியில் உள்ள பிரச்சனைகள் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டு எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.