ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்

ஓசூரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளை, அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-01-16 10:30 GMT

ஓசூரில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட இறைச்சிக்கடை ஒன்று. 

கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில்,  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக,  மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், உழவர் சந்தை, சில்லரை வியாபாரிகள், பூ மார்க்கெட் என அனைத்து கடைகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி பேருந்து நிலையம் உள்பட தேசிய நெடுஞ்சாலை, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இருந்தபோதும், ஓசூர் மாநகராட்சியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் ஆங்காங்கே இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாமிச பிரியர்கள் இறைச்சி வாங்க திரண்டனர். அரசு உத்தரவை மீறி இயங்கிவரும் இறைச்சிக் கடைகள் மீது, மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

மேலும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கை பயனற்றதாக உள்ளது. எனவே, காவல்துறை மற்றும்  ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தி, விதிமீறல் புரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News