வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் தங்கநகைகள், ரூ. 2.75 லட்சம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.;
ஓசூர் அருகே உள்ள உப்கார் லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (51) இவர் தொழிற்சாலைகளுக்கு இயந்திரங்களை வாங்கி விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி பாஸ்கர் தனது குடும்பத்தினரோடு வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஸ்ரீபாதநல்லூர் கிராமத்திற்கு கோவில் விழாவிற்காக சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள இரும்பு கிரில் கேட், மரக்கதவு ஆகியவை உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 43 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், திருட்டு சம்பவம் குறித்து ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிப்காட் பகுதி போலீஸார் அருகே உள்ள கண்காணிப்பு கமிராவில் பதிவாகிவுள்ள காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.