ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
ஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓசூர் சானசந்திரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரப்பர் உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் ஆனந்தகுமார் கட்டிடத்தை காலி செய்து சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆனந்தகுமார் 300 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்காக ரூ.12 ஆயிரத்து 500 பணம் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, தான் அதிக தொகை கட்டியதாக ஜெயராமிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் நேற்று சீதாராம் மேடு என்ற பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆனந்தகுமாரை ஜெயராம், மணி , பாலாஜி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் காயம் அடைந்த ஆனந்தகுமார் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் ஜெயராமன், மணி, பாலாஜி ஆகிய 3 பேர் மீதும் ஓசூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., சித்திக் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.