ஓசூர் அரசு ஐடிஐ.,யில் குறுகிய கால தையல், பின்னலாடை பயிற்சிக்கு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐடிஐ.,யில் குறுகிய கால தையல் மற்றும் பின்னலாடை பயிற்சிக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு தொழில்துறை பயிற்சி நிலையத்தில் குறுகிய கால தையல் மற்றும் பின்னலாடை பயிற்சிக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால தையல் மற்றும் பின்னலாடை பயிற்சி அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக மகளிர் பயன்பெறும் வகையில் 40 காலி இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.
விருப்பமுள்ள 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட, பள்ளிப் படிப்பு முடித்தவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகிய அனைவரும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மூன்று மாதகால பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு உறுதி. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கை கட்டணம் ரூ.100 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் வருகிற 15ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநரை நேரில் அணுகி பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 04344-262457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.