மதுபாட்டில் கடத்திய 6 பேர் கைது- 3 சரக்கு வேன், ஒரு கார் பறிமுதல்
ஓசூர் வழியாக கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சரக்கு வேன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக, மதுக்கடைகள் காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல கூடிய சிலர் சரக்கு வாகனங்களில், கர்நாடக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன் பேரில் ஓசூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் ஓசூர் ஜூஜூவாடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சரக்கு வாகனங்கள் மற்றும் காரில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மூவேந்தன், மருதுபாண்டியன், சூளகிரியை சேர்ந்த முனிராஜ், பாலக்கோட்டை சேர்ந்த அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34, கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நடந்த ஆய்வில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, பெங்களூருவை சேர்ந்த பால்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 672 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு சரக்கு வேன், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.