கழிப்பிடம் கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலைமறியல்
பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டை உலிமங்கலம் கிராமம். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள பழைய கழிவறைகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டி யுள்ளது. அப்படி சென்ற போது மாணவி ஒருவரது காலில் கண்ணாடி துண்டு குத்தியதில் காயமடைந்தார். இந்த அவல நிலையினை வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றேர்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பள்ளி முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சலீம் பாஷா, மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதியளித்த பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பள்ளிக்கு சென்றனர்.