தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத பயிர் கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத பயிர் கடன் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்;
கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தகுதி உள்ள அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் வட்டியில்லாத பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர் கடனாக தனி நபர் பிணையத்தின் பேரில் ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டில் 33 ஆயிரத்து 11 விவசாயிகளுக்கு ரூ.286.66 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தற்போது வரையில் 3727 விவசாயிகளுக்கு ரூ.33.92 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு வட்டியில்லா பயிர் கடனாக ரூ.310 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்களுடன் தங்களின் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்கடன் பெற்று கொள்ளலாம்.
மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் நில உடமை, சிட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பான் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அளித்து உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லாத பயிர்கடன் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்