கரூர் அருகே அரசு பள்ளியில் அழுகிய முட்டை: அதிர்ச்சியில் பெற்றோர்கள்
கிருஷ்ணராயபுரம் கவுண்டம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்க கொடுக்கப்பட்ட முட்டை அழுகியிருந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
கரூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த சத்துணவு முட்டைகள் அழுகி புழுக்கள் இருந்ததால், மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 250 மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர் . கொரோனா கட்டுபாடு காரணமாக பள்ளிகள் மூடியிருப்பதால் மாணவ ,மாணவிகளுக்கு வாரம் தோறும் சத்துணவில் அரிசி , பருப்பு , முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தப்பள்ளியில் மாணவ ,மாணவிகள் பெற்றோர்களுடன் சத்துணவு உணவை வாங்க வந்துள்ளனர் . அப்போது மாணவர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அழுகி புழுக்கள் வைத்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இதை பார்த்த மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மாணவ, மாணவிகளுக்காக வழங்கப்படும் முட்டைகள் தரமாக உள்ளதா என பரிசோதித்து வழங்க வேண்டும். மேலும் முட்டை டெண்டர் எடுத்தவர்கள் பள்ளிகளுக்கு வழங்கும் முட்டைகளை தரமானதாக வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முட்டை அழுகி புழுக்கள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.