மத்திய அரசு விருதுக்கு கரூர் ஆசிரியர் தேர்வு
கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரன் தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுவதாக.மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகரனும் தேசிய விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த வகையில் 2018ம் ஆண்டிற்கு மூன்று ஆசிரியர்களும், 2019ம் ஆண்டிற்கு மூன்று ஆசிரியர்களும் என ஆறு ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது.
இதில், கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோகர், 2018ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர், தனது பள்ளியில் மாணவர்களுக்கு QR Code குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து வழங்கியுள்ளார். மாணவர்கள் வீட்டில் மொபைல் போனில் அடையாள அட்டையில் உள்ள QR Codeஐ ஸ்கேன் செய்தால் மாணவர்களின் வருகைப் பதிவேடு, பள்ளி அளவில் நடக்கும் தேர்வுகளின் மதிப்பெண்கள், தினமும் வீட்டுப்பாடம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள முடியும். இந்த வகையில், மாணவர்களை கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு தொழில் நுட்பப் பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் மனோகரனை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.