கரூரில் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற 3 பேர் கைது
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கரூரில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சாலையில் செல்ல அனுமதிக்காத போலீசார் மீது மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீயிட்டு வீசிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 20 இரவு கரூர் திருமாநிலையூர் சோதனை சாவடியில் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளை கரூர் நகர் பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்து பலரையும் திருப்பி அனுப்பினர்.
அன்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து திருமாநிலையூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் மீது வீச முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள மின் கம்பியின் மீது பட்டு கீழே விழுந்தது. வீசிய நபர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று மாலை திருமாநிலையூர் பகுதியைச. சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தபோது, அவர்களில், ராமமூர்த்தி, கதிரேசன் பிரசாந்த்குமார் ஆகியோர் போலீசாரின் மீது திட்டமிட்டு பெட்ரோல் குண்டு தயாரித்து வீசியதை ஒப்புக்கொண்டனர்இதனையடுத்து பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் மூவரையும் கைது செய்தனர். மேலும் ஜெயசூர்யா என்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.