பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன்
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சிஐடியு வலியுறுத்தல்;
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன்
திமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பதே சிஐடியு நிலைபாடு என்றார் சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன்.
கரூரில் இன்று நடைபெற்ற சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் சொத்துகளை குத்தகை விடும் திட்டத்தை சிஐடியு எதிர்க்கிறது. இதை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் சொத்துகளை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் பணம் ஈட்ட முடியும் என்றால், மத்திய அரசு இதை பயன்படுத்தி பணம் ஈட்ட வேண்டும்.
மின்சார சட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பாதிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்காததால் அதிமுக அரசு நிராகரிக்கப்பட்டது. நூல் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பபட்டுள்ளது. இந்தியாவின் 50 சதவிகித ஜவுளி தேவையை தமிழகம் பூர்த்தி செய்கிறது. எனவே ஜவுளியை நூல் விலையை மத்திய அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்.மாநில அரசை பின்பற்றி, மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். வாரிய பணப்பலன்கள் இரட்டிப்பாக்க வேண்டும். தொழிலாளர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளும் தொழிலாளர் நலன் காக்க ,மாட்டு வண்டி மணல் அள்ளும் குவாரிகளை திறக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு அளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டசபையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாராட்டுகிறேம். நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் விவசாய போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் என்றார் சவுந்தர்ராஜன் .