ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: நெல்லையில் நாளை ஆய்வுக் கூட்டம்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நாளை திருநெல்வேலியில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆய்வுக் கூட்டம் நாளை திருநெல்வேலி நடைபெற உள்ளது என கரூரில் செந்தில்பாலாஜி பேட்டி:
கரூரில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விருது பெற்ற 10 ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில், எண்ணூர் அனல் மின் நிலையத்தை தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைவு என புகார் எழுந்துள்ளது. இதேபோல சேலம் அனல் மின் நிலையத்திலும் ஆய்வு நடத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியின் போது இந்த நிலக்கரி இருப்பு குறித்து இரு குழு அமைக்கப்பட்டதாகவும், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்றதாகவும் அதிமுகவை சேர்ந்தவர் கூறினார்கள் அந்த அறிக்கைகளை ஏன் வெளியிடவில்லை. கடந்த ஆட்சியில் யாரை காப்பாற்றுவதற்காக இந்த விசாரணை அறிக்கையில் வெளியிடப்படாமல் இருந்தது.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆய்வுக் கூட்டம் நாளை திருநெல்வேலி நடைபெற உள்ளது. இதுவரை தமிழக வரலாற்றில் வருடத்திற்கு 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
முதல் முறையாக தமிழக வரலாற்றிலேயே ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு என காவிரி ஆற்றில் இரண்டு இரண்டு தடுப்பணைகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் இதற்குரிய முறையான அரசாணை வெளியிடப்பட்டு திட்ட பணிகள் தொடங்கப்படும். கடந்த ஆட்சியில் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நிறுத்தி வைக்கப்பட்ட பல மக்கள் நல திட்டங்கள் இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் அழிந்து வரும் அரிய வகை மரக்கன்றுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் , திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.