மாயனூர் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்ததால் மீனவர்கள் அதிகளவில் மீன் பிடித்து விற்பனை
மாயனூர் தடுப்பணையில் நீர்வரத்து குறைந்துபோனதால் மீன்கள் பிடித்தொழில் தொடங்கியதால் வியாபாரம் சூடுபிடித்தது
மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடிக்கும் கீழ் குறைந்தது - நீர் வரத்து குறைந்ததால் மீனவர்கள் அதிகளவில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், கர்நாடகாவில் மழை அதிகளவில் பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. சில வாரங்களாக நீர் வரத்து குறைந்ததால், திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையிலிருந்து 1500 கன அடி தண்ணீர் விநாடிக்கு திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரங்களில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 1500 கன அடி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 1000 கன அடியாகம், 850 கன அடியாகவும் வந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 459 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 16.72 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணையில் தற்போது 7.87 அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரின் போக்கை மாற்றி தடுப்பணை பகுதியில் தூர் வாறுதல், சட்டர்களை பராமரித்தல் போன்ற பணிகளில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்கள் ருசி அதிகம் என்பதால் கரூர் மாவட்டம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் இருந்து வரும் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை முதலே மீன் விற்பனை சூடு பிடித்துள்ளது.