நூலகத்தை மாணவியை திறக்க வைத்து அசத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி
பள்ளி கட்டடத்தை திறக்க வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி நூலகக் கட்டடத்தை மாணவி ஒருவரை திறக்க வைத்து அசத்தினார்.;
கரூரில் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அந்த பள்ளியின் நூலகத்தை மாணவி ஒருவர் மூலம் திறந்து வைத்ததை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.
கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏ.பி.கே. நினைவு அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் வகுப்பறை, நூலகம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவை கட்ட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடங்களை இன்று திறந்து வைத்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென அப்பள்ளியின் மாணவி ஒருவரை அழைத்து நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும்படி கூறினார்.
மாணவி மிரண்டு போய் ஆசிரியர்களை பார்த்தார். ஆசிரியர்களும் திறந்து வைக்கும்படி கூறினார். மகிழ்ச்சி பொங்க அந்த மாணவி நூலகத்தின் கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளியில் நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசுப்பள்ளிக்கு புதிய கட்டுமான பணிக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஏ.பி.கே. நினைவு அறக்கட்டளையின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.