வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 4 கோடி மோசடி :விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலவிடுதி வேளாண் சங்கத்தில் நிலமில்லாதவர்கள், அரசு ஊழியர்கள், சங்க ஊழியர்களுக்கு பயிர் கடன் வழங்கி் மோசடி

Update: 2021-08-09 12:26 GMT

கரூரில் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 4 கோடி ரூபாய் பயிர் கடனில் மோசடியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் நிலம் இல்லாதவர்கள், அரசு ஊழியர்கள், சங்க உறுப்பினர்களுக்கு பயிர் கடன் அளித்து 4 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி விவசாயிகள் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு புகார் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 4,750 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்கி வருகிறது.

 கடந்த 2016, 2021 ஆம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடியில் சுமார் 4 கோடி ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளதாக கூறி சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சங்கத்தில் கடந்த 2016 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் பயிர்க் கடன், விவசாய நகைக் கடன் தள்ளுபடியில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் சங்கத் தலைவர் செல்வராஜ் மற்றும் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நிலமில்லாத விவசாயிகளுக்கு பயிர்கடன் கொடுத்துள்ளதாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் சங்கத்தில் பணி புரிவோருக்கும் பயிர் கடன் கொடுத்து அந்த கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.  உண்மையான விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.  தொடர்ந்து நேர்மையான அதிகாரிகளை கொண்டு இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரணை நடத்தினால் பல கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் எனவும் விவசாயிகள் கூறினர்.

 இந்த கடன் சங்கத்தின் தலைவராக உள்ள செல்வராஜ் அதிமுக கடவூர் ஒன்றிய செயலாளராக இருந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News