புதை மணலில் சிக்கி தொடரும் உயிரிழப்புகள்: நிரந்தர தீா்வு காண கோரிக்கை
காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி உயிரிழப்புகள் தொடா்ந்து நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.;
கா்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் இருந்து பரந்து விரிந்து வரும் காவிரி ஆறு கரூா் மாவட்டத்தில் மாயனூா் கதவணை பகுதியை கடந்து செல்கிறது. இங்கிருந்து தென்னக நதிகளை இணைக்கும் திட்டமான காவிரி, குண்டாறு, வைகை இணைப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அகண்ட காவிரியாக மாயனூா் இருப்பதால் மணல் திட்டுகளும் அதிகளவில் காணப்படும். ஆற்றில் நீரோட்டம் குறைந்த காலங்களில் மணல் பரப்பு அதிகம் காணப்பட்டாலும் முழங்கால் அளவில் தண்ணீா் ஓடினாலும், அதில் புதை மணல் இருப்பது தெரியவே தெரியாது. இதனை அறியாததால் சிலா் புதை மணலில் சிக்கி உயிரிழக்கின்றனா்.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிலிப்பட்டியைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் 4 போ் காவிரி ஆற்றில் குளிக்க வந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நிரந்தர தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பள்ளி மாணவிகள் உயிரிழந்த இடம் மணல் குவாரி செயல்பட்ட இடம். அந்த இடத்தில் புதைமணல் உள்ளது. கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறை மீறி மணல் அள்ளப்பட்டதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஏற்கெனவே ஆற்றில் மணல் அள்ளப்பட்டு பள்ளமாக இருப்பதால், ஆற்றில் கடந்த ஆண்டு பெய்த மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில், புஞ்சை புகழூா் கதவணை கட்டும் பணி நடைபெறும் பகுதியில் பரவிக்கிடந்த மணல் திட்டு அடித்துச் செல்லப்பட்டு ஆற்றின் மையப்பகுதியில் மணல் அள்ளப்பட்ட இடத்தை நிரப்பியுள்ளன. ஆற்றின் குழியான பகுதியில் நிரம்பியுள்ள மணல் இறுகுவதற்கு பல ஆண்டுகளாகும்.
தற்போது குழிக்குள் நிரம்பிய மணல்கள் அனைத்தும் புதிய இடங்கள் என்பதால் அவை புதைமணல் பகுதியாக மாறியுள்ளன. இதனால் ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீா் செல்கிறது என்று நினைத்து அறியாமல் குளிக்கச் செல்பவா்கள் புதை மணலுக்குள் சிக்கி உயிரிழக்கிறறா்கள். மணல் அள்ளப்பட்ட சில இடங்கள் இன்னும் பாதாள குழிகளாகவே உள்ளன. இந்த பகுதியில்தான் மாணவிகள் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
இதற்கு நிரந்தர தீா்வு என்பது ஆற்றில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பான வகையில் படிக்கட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும். மற்ற பகுதிகளை கம்பி வேலி கொண்டு அடைத்து, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர்
இதுகுறித்து காவிரி ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரியிடம் கேட்டபோது, காவிரி ஆற்றில் படித்துறை அமைப்பது என்பது. கரையோரம் உள்ள ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் வருகிறது. மாணவிகள் இறந்த சம்பவம் காரணமாக இனி ஏதும் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை என்று கூறினார்