கரூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு
கரூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.;
கரூரில் கார், லாரி, மினி லாரி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கரூர் மாவட்டம் பவுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமி என்ற மணி, நில புரோக்கர். இவர் இருசக்கர வாகனத்தில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அதே சாலையில் பவித்திரம் அருகே உள்ள நெடுங்கூரை சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் சிவசாமி, மினி லாரியை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். பவித்திரம் என்ற இடத்தின் அருகில் உள்ள வானாவிழி என்ற இடத்தில் சிவசாமி ஓட்டி வந்த மினி லாரியும், சாமி என்ற மணி ஒட்டி சென்ற இருசக்கர வாகனம், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த கார் மற்றும் ஜல்லிக் கற்களை ஏற்றி செல்லும் லாரி ஆகிய நான்கு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமுற்ற மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிவசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிந்து 4 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று எவ்வாறு மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மணியும், சிவசாமியும் உயிரிழந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர்.