ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருள்கள் ரூ.24 லட்சத்துக்கு ஏலம்

அரசு வேளாண் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Update: 2021-10-19 15:30 GMT

பைல் படம்.

கரூர் மாவட்ட எல்லையில் உள்ள சாலைப்புதூரில் அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

இதில் கொடுமுடி மற்றும் க.பரமத்தி, கரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 39.75 குவிண்டால் எடைகொண்ட 12 ஆயிரத்து 382 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.29.15ம், குறைந்த விலையாக ரூ.26.15ம், சராசரி விலையாக ரூ. 28.56ம் என்று ரூ. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 229க்கு விற்பனையானது. இதேபோல,  225.06 குவிண்டால் எடைகொண்ட 487  மூட்டை தேங்காய் பருப்பு வரத்தானது.

இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ. 103.69ம், குறைந்த விலையாக ரூ.100.40ம், சராசரி விலையாக ரூ.102.05ம், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.100.70ம், குறைந்த விலையாக ரூ.76.46ம், சராசரி விலையாக ரூ.90.16ம் என்று ரூ.20 லட்சத்து 79 ஆயிரத்து 577 க்கு விற்பனையானது.

இன்று  நடந்த ஏலத்தில் 36.88 குவிண்டால் எடைகொண்ட 109 மூட்டை நிலக்கடலைக்காய் வரத்தானது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.67.60ம், குறைந்த விலையாக ரூ.62.16ம், சராசரி விலையாக ரூ.64.60ம் என்று ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 323 க்கு விற்பனையானது.

ஒட்டு மொத்தமாக இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் விளைபொருட்கள் ரூ.24லட்சத்து 25ஆயிரத்து129க்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News