கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின் பகுதியை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரசாந்த் வடநேரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் சேலம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் பின்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவில்லை.
பின் பகுதிக்குள் யாரேனும் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் பின்பகுதியை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.