உதிரி பாகம் விற்பனையகத்தில் தீ விபத்து: ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
கூண்டு கட்டும் உதிரிபாகம் விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.;
கரூர் ஆத்தூர் பழனியப்ப நகரைச் சேர்ந்தவர் மெய்யர் மற்றும் ராஜா. இவர்கள் இருவரும் கோவை சாலையில் பேருந்து கூடு கட்டும் பணிக்காக பஞ்சு பொருட்கள், உதிரிபாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் கடையில் இருந்து திடீரென புகை மூட்டத்துடன் தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கடையில் பற்றிய தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவத் தொடங்கியது. இதனையடுத்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைக்க முயன்றனர்.
இதனையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கடைக்குள் இருந்த உதிரிபாகங்கள், பஞ்சு பொருட்கள், ஆயில் கிரீஸ் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.