க.பரமத்தியில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் க.பரமத்தியில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-18 15:39 GMT

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்க தலைவர் வளர்மதி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. வளர்மதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் கோபால் வரவேற்றுப் பேசினார். ஒன்றிய பொருளாளர் புவனேஸ்வரி, மாநில இணைச் செயலாளர் தமிழ்செல்வன், ஜெகதீசன், கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட 850 ரூபாய் குறைவான ஊதியம் பெற வேண்டி இருப்பதால் இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்,

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் வழங்கும் போது வேண்டுமென்றே இழுத்தடித்து வருகின்றனர். எனவே ஊராட்சி செயலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தில்  வழங்கவேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ 20,000 வழங்குவதுடன், அவர்களின் குடும்பசூழல், காலத்தை கருத்தில்கொண்டு ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளர் நிலையில், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி பணியமர்த்த வேண்டும்,

கொரோனா  காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சி துறை பணியாளருக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ 15,000 ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொரோனா முன்கள பணியாளராக பணியாற்றி நோய் தொற்றால் இறந்தவருக்கு அரசு விதிமுறைப்படி ரூ 25 லட்சம் குடும்ப நலநிதி உடனே வழங்க வேண்டும்,

ஊராட்சித் துறையில் தற்போது அரசியல் அழுத்தங்கள் அதிகமாக இருப்பதால் மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News