கரூரில் மக்களைத் தேடி மருத்துவ சேவை : அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் நீரழிவு நோயாளிகள், எழுந்து நடமாட முடியாத மக்கள், வயதானவர்கள் பயன் பெறுவர்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் என்ற பயனுள்ள திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடக்கி வைத்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான பல முக்கிய நல்ல திட்டங்களை செய்து வரும் முதல்வர், தேர்தல் நேரத்தில் கூறி வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் சிறப்பு திட்டங்களை தொடர்ந்து, தற்போது மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பெறும் நிலையை மாற்றி, அவர்கள் இல்லம் தேடி மருந்து செல்லும் சிறப்பான திட்டம் மூலம், இங்குள்ள நீரழிவு நோயாளிகள், எழுந்து நடமாட முடியாத மக்கள், வயதானவர்கள் உட்பட மொத்தம் 2264 நபர்கள் பயனடைவர் என்றார்.
முன்னதாக, பள்ளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தொற்றா நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று 2 மாதங்களுக்கு தேவையான மாத்திரை பெட்டிகள் வழங்கினார். தொடர்ந்து, பள்ளப்பட்டி ஹாஜிரா மஹாலில் பள்ளப்பட்டி பகுதி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.