கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
கொரோனா பரவாமல் இருப்பதற்காக கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான வெங்கமேடு, வடிவேல் நகர், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். மளிகை கடைகள் திறந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள், போலீசார் ரோந்து வரும் போது மட்டும் கடையை அடைப்பது போல் பாசாங்கு செய்து விட்டு மீண்டும் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வடிவேல் நகர் பகுதிகளில் இறைச்சி கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார் வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினரும், நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளும் சில கடைகள் திறந்து இறைச்சி விற்பனை செய்து வந்தததை கண்டுபிடித்தனர். திறக்கப்பட்ட கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், நகராட்சி அதிகாரிகள் அக்கடைகளை பூட்டி சீல் வைத்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, தேவையற்ற வகையில் ஊர் சுற்றும் நபர்களை கண்டறிந்து அவர்களின் இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.