ரூ.197 கோடி வங்கிக்கடன்; ஏலத்துக்கு வந்த முன்னாள் எம்.பி., சொத்துகள்
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் கரூர் தொகுதி முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியின் சொத்துகள் ஏலம் விடப்படுகிறது.;
கரூரின் முன்னாள் எம்பியும், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான கே.சி.பழனிசாமி பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன் தொகையை இதுவரை திருப்பி செலுத்தவில்லை. இதனால், அவரது 9 அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக வங்கிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர். இவர் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சொந்தமாக பேக்கேஜ் நிறுவனம் மற்றும் பேப்பர் மில் உள்ளிட்டவைகளில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இவர் கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கடன்களை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வங்கிகள் சார்பில் இன்று நாளிதழ்களில் கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி ஆகிய வங்கிகளில் சுமார் 197 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும், அந்த கடன்களை திருப்பி செலுத்தாத காரணத்தால் அவருக்கு சொந்தமான கரூர் மற்றும் திருச்சியில் 9 இடங்களில் உள்ள உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.