மக்கள் பிரச்னைகள் குறித்து திமுக சட்டசபையில் பேசவில்லை
மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல் சட்டசபையில் தி.மு.க வெளிநடப்பு செய்ததுதான் சாதனை என்று ஜி.கே.வாசன் கூறினார்.;
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேசாமல் வெளிநடப்பு செய்து வந்த திமுகவை இந்த தேர்தலில் முறியடிப்பதுதான் வாக்காளரின் கடமை என ஜி.கே. வாசன் பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசன் அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,
'இந்தியாவிலேயே மகளிருக்கான அதிக திட்டங்களை செயல்படுத்தும் அரசு தமிழக அரசுதான். இன்றைக்கு அதிமுக அரசு சாதனை படைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக் கடன் தள்ளுபடி என மக்கள் நலத் திட்டங்கள் ஏராளம். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் ஆகி அரவக்குறிச்சி மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசி, வாதாடி தீர்த்து வைப்பார்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் வெளிநடப்பு செய்து, உள்ளே வெளியே என்று நடமாடிக் கொண்டிருந்தனர். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேசாத திமுகவை இந்த தேர்தலில் முறியடிப்பதுதான் வாக்காளரின் கடமை' என பேசினார்.