பாரத் பெட்ரோலியம் அலட்சியத்தால் கிளீனர் உயிரிழப்பு: ஓட்டுநர்கள் போராட்டம்

பாரத் பெட்ரோலியம் முனையத்தில் எரிபொருள் ஏற்ற வந்த லாரி கிளீனர் உயிரிழந்தார்.

Update: 2021-11-23 11:45 GMT

கிளீனர் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்.

கரூர் மாவட்டம் ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவன முனையம் உள்ளது. இங்கு இருந்து 20-க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. 58 வயதான இவர் லாரி ஒன்றில் கிளீனராக பாரத் பெட்ரோலியம் முனையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தார்.

நேற்று மாலை அவருக்கு பாரத் பெட்ரோலிய மையத்தில் உள்ள காத்திருப்பு இடத்தில் லாரியை வைத்து இருந்த போது,  திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதையடுத்து ஓட்டுனர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்பதற்காக பாரத் பெட்ரோலிய முனையத்தில் உள்ள ஆம்புலன்சை அவசர உதவிக்காக கேட்டனர்.

ஆனால், ஓட்டுநர் இல்லாத காரணத்தால், நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்தனர். வேறு ஆம்புலன்ஸ் வருவதற்குள் கிளீனர் செல்வமணி வலிப்பு நோய் முற்றிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வலிப்பு நோய் ஏற்பட்ட கிளீனரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வழங்காத பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மீனவரின் உடலை பாரத் பெட்ரோலியம் நிலையத்தின் வாசலில் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஏடிஎஸ்பி கண்ணன், டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட ஓட்டுநர்களை சமாதானப்படுத்தினர். லாரி ஓட்டுனர்கள் கோரிக்கைபடி, பாரத் பெட்ரோலியம் முனையத்தில் ஓட்டுநர்களுக்கு மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, செல்வமணியின் உடல், உடல் கூறு ஆய்வுக்கு பிறகு ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு, செல்வமணி உயிரிழந்தது தொடர்பாக, நாங்கள் யாரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. எனவே உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என செல்வமணியின் தம்பி மற்றும் மகன்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதாக அழைத்து சென்றனர்.

அங்கு குழுமியிருந்த ஓட்டுநர்களும் போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து செல்வமணியின் உடல், உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Tags:    

Similar News