குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார்

கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார் மனுவை மக்கள் அனுப்பி உள்ளனர்.

Update: 2021-09-26 10:09 GMT
கரூர் மாவட்டம் தென்னிலை பிர்கா மக்கள் முதல் அமைச்சருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவின் நகல்

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகாவை சேர்ந்தது தென்னிலை. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தற்போது ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிலை பிர்காவில் வசிக்கும் மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

குடும்ப அட்டை இல்லாத மக்கள் எளிய முறையில் குடும்ப அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்தும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மக்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். தென்னிலை பிர்காவிற்கு உட்பட்ட மக்கள் புகழூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இப்படி விண்ணப்பம் செய்தவர்களின் செல்போன் எண்ணிற்கு 9524515515 என்ற குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது அதில் பேசும் நபர் நீங்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்து இருக்கிறீர்கள்.எனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுத்தால்தான் குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு தொடர முடியும் என கூறி வருகிறார்.

இப்படி மொஞ்சனூர் கிராமத்தில் மூன்று பேரிடமும், மீனாட்சி வலசு கிராமத்தில் இரண்டு பேரிடமும் அந்த நபர் தலா ரூபாய் ஐந்தாயிரம் வசூல் செய்திருப்பதாகவும் புகழூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 100 பேரிடம் இப்படி பணம் வசூல் செய்திருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. பணம் கொடுக்க மறுப்பவர்களது விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு எளிதாக நக்ஷகுடும்ப அட்டை கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு இடையூறாக செயல்படும் இதுபோன்ற இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடியில் ஈடுபடும் நபர் நியாயவிலைக் கடை பணியாளர் என தெரிய வந்துள்ளதால் அவர்மீது முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News