ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!

ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்கள் வாலாஜாபாத் ஏற்றுமதி மையத்திலிருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது;

Update: 2024-04-25 12:45 GMT

வாலாஜாபாத் ரயில் நிலையம்

( கோப்பு படம்)

கடந்த ஆண்டு வாலாஜாபாத் ரயில் நிலைய ஏற்றுமதி முனையத்தில் 86 கோடியே 24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் தெரியவந்துள்ளது.வருவாய் ஈட்டியும், சிறப்பு விரிவாக்க திட்டத்தை காலம் தாழ்த்துவதாக ரயில்வே நிர்வாகம் மீது பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் அன்றாட பொது போக்குவரத்துக்கு முக்கிய தேர்வாக ரயில் மற்றும் பேருந்து சேவைகளை கருதுகின்றனர். பேருந்து கட்டணம் கூடுதலாக இருந்தாலும் ரயில் கட்டணம் மிக மிகக் குறைவு என்பதால் பொதுமக்களின் முதல் தேர்வு ரயில் பயணமாக உள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை தடத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 25 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் , அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மருத்துவ சேவை நாடுவோர் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின் தொடர் வண்டிகள் குறைந்த அளவே செயல்பட்டு வரும் நிலையில் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வரை அதன் வருவாயோ பல கோடி ரூபாய் என தகவல் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரயில்வே பயணிகள் சங்கத்தை சேர்ந்த ரங்ககநாதன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் தென்னக ரயில்வேக்கு , அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் வழித்தடத்தில் பயணிகளின் மூலம் வரும் வருவாய் எவ்வளவு ?

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் மற்றும் கிழக்கு ரயில் நிலையத்தின் பயணிகள் வருவாய் எவ்வளவு ?

வாலாஜாபாத் ரயில்வே நிலையம் அருகே செயல்படும் ஏற்றுமதி முனையத்தின் மூலம் பெறப்பட்ட வருவாய் எவ்வளவு ?

காஞ்சிபுரத்தில் உள்ள ரயில்வே ஏற்றுமதி முனையத்தின் வருவாய் எவ்வளவு ? என 4 கேள்விகளை முன் வைத்தார்.

இதற்காக தென்னக ரயில்வேயின் மண்டல வணிக பிரிவு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் இரண்டு ரயில்வே நிலையங்கள் மூலம் பயணிகள் வருவாய் பிப்ரவரி மாதம் சுமார் 30 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வாலாஜாபாத் ரயில் ஏற்றுமதி முனையம் கடந்த ஓராண்டில் 86 கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 408 (86,24,95,408) ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம் ஏற்றுமதி மையத்தின் மூலம் ஒரு கோடியே 72 லட்சத்து 76 ஆயிரத்து 158 ரூபாய் வருவாய் கடந்த ஆண்டு ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல கோடி ரூபாய்கள் வருவாய் ஈட்டும் இந்த வழித்தடத்தில் அவ்வப்போது ரயில் பயணிகளின் சேவைகள் நிறுத்தப்பட்டும் காத்திருக்கும் சூழ்நிலையை தவிர்க்க புதிய ட்ராக் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள எந்த ஓரு துரித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதும் , ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஆன கழிவறை , குடிநீர் என அனைத்தையும் சரிவர பராமரிப்பதில் இல்லை எனவும் ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரயில்வே சேவைகள் மூலம் மூலம் பல கோடி ரூபாயும் வருவாய் ஈட்டும் தென்னக ரயில்வே சுற்றுலாத்தலமாக விளங்கும் காஞ்சிபுரத்தை மென்மேலும் வளர்க்கும் வகையில் புதிய திட்டங்களை விரைவாக கொண்டு வர வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News