உத்தரமேரூர் : அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகளுக்கு ரூ21 ஆயிரம் அபராதம்..!
உத்திரமேரூர் அருகே அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற ஐந்து கனரக லாரிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.இராஜலட்சுமி எச்சரிக்கை செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து செங்கல்பட்டு ஒரகடம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் 24 மணிநேரமும் கட்டுமான பொருட்களான எம் சாண்ட் மற்றும் கருங்கற்களை ஏற்றி செல்கிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்று திரும்பி வருகையில் மாகரல் அருகே அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தொடர்ச்சியாக லாரி வருவதை கண்டு லாரிகளை நிறுத்த கூறினார்.
அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுனர்கள் லாரியை நிறுத்தி வட்டு தப்பி ஓடினர். ஒரு லாரி ஓட்டுனர் மட்டும் சிக்கிய நிலையில் வாகனங்களை சோதனை செய்த வருவாய் கோட்டாட்சியர் பேரிடர் காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதாகவும் , அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக கூறி 21 ஆயிரம் ரூபாயை ஐந்து லாரிகளுக்கும் அபராதம் விதித்தார். அபராதம் கட்டிய பின் லாரிகளை விடுவிக்க காஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருக்கு வருவாய் கோட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.