கல்குவாரியில் மண் சரிந்து விபத்து: வட மாநிலத்தை சேர்ந்த இருவர் பலி
காஞ்சிபுரம் அடுத்த பட்டா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து 2 வடமாநில தொழிலாளர்கள் புதையுண்டனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் , சாலவாக்கம் வட்டம் , பட்டா கிராமத்தில் சென்னை பகுதியை சேர்ந்த செல்வேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான R S Mines எனும் பெயரில் கல்குவாரி தொழிற்சாலை இயங்கிவருகிறது.
இந்நிறுவனத்தில் உத்திரபிரதேசம் பகுதியை சேர்ந்த ஷேர்கான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ஷேத்திரி ஆகியோர் JCB ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் JCB இயந்திரம் அருகே சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்றபோது திடீரென மண்சரிந்து சுமார் 30அடியில் மண்புதையில் இருவரும் சிக்கினர். இதை கண்ட மற்றொரு ஊழியர் தமிழ்வாணன் கூச்சலிட்டு அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் பேரில் ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கும் , வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்து பகுதியில் போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகளை அதிகாலையிலிருந்து தொடங்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மண் சரிந்து இரண்டு பேர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.