மகளிருக்கான பிங்க் கலர் பேருந்தில் கட்டணம் வசூல்.. காஞ்சிபுரத்தில் குழப்பம்…
காஞ்சிபுரத்தில் மகளிர் கட்டணமில்லாமல் செல்ல இயக்கப்படும் பிங்க் கலர் பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் குழப்பம் நிலவி வருகிறது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8 ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது.
இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பேருந்து என அறிந்து கொள்ளும் வகையில் பேருந்து முன் முகப்பு பிங்க் கலரில் வண்ணம் தீட்டப்பட்டு பேருந்து செயல்பாட்டில் உள்ளது
இந்தநிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாள் ஒன்று சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாதம் சுமார் 800 ரூபாய் பெண்களுக்கு மீதம் ஏற்படுவதாகும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் பணிமனையின் கீழ் செயல்படும் தடம் எண் 89 F என்ற பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் வரை செல்கிறது. இது அனைத்து பயணிகளுக்குமான கட்டண பேருந்து ஆகும்.
ஆனால், போக்குவரத்து துறையோ மகளிர் இலவச பேருந்து வண்ணம் கொண்ட பேருந்தை (தடம் எண் 89 F) இயக்கி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் வண்ணத்தை பார்த்துவிட்டு இலவச பேருந்து என பெண்கள் பேருந்தில் ஏறுவதும், அதன் பிறகு நடத்துநர் பயணிகளிடம் கட்டணம் கேட்கும் போது இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பொதுவாக கிராமப்புற பெண்கள் 50 சதவீதத்துக்கு மேல் கல்வி கற்காதவர்கள் என்பதும் சிறு வணிகப் பொருட்களை காஞ்சியில் வந்து வாங்கி சென்று கிராமப்புறங்களில் விட்டு வாழ்வாதாரம் நீட்டி வரும் நிலையில் பேருந்தின் வண்ணத்தை கொண்டும் பயணித்து வரும் தாங்கள் அந்த பேருந்து தான் என அதில் ஏறிய பின்பு நடத்துனர் கட்டணம் கேட்டதும் அதிர்ச்சி அளித்துள்ளது என்றும், இது போன்று போக்குவரத்து துறை செயல்பட்டது தவறான செயல் என தெரிவித்தனர்.