நீர் மேலாண்மைக்கு உதாரணமாக விளங்கும் தென்னேரி கிராமம்!
சங்க காலத் தொன்மை வாய்ந்த கிராம ஊராட்சியாக தென்னேரி இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த சங்க காலத் தொன்மை வாய்ந்த கிராம ஊராட்சியாக தென்னேரி இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது:
வாலாஜாபாத் அருகேயுள்ள தென்னேரி என்ற இவ்வூரின் ஏரியான நீர் நிலையை வைத்து இது திரையன் ஏரி என்றும் திரையனேரி என்றும் வழங்கப்பட்டு பின்னாளில் பேச்சு வழக்கில் தென்னேரி எனத் திரிந்து அழைக்கப்பட்டு வருகிறது.
சங்க கால தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த செய்தி சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது பெயராலேயே திரையன் ஏரி ஏற்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி சேப்பேடு இந்த ஏரி என திரளயதடாகம் மற்றும் திரையன் ஏரி என்று குறிப்பிடுகிறது. கிபி 12 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் திரையனூர் என்றும் ஏரியை தென்னேரி என்றும் அழைக்கப்பட்டது.
அ’கரத்தில் தொடங்கி உ’கரத்தில் முடியும் பாசனம்:
15 சதுர மைல் பரப்பளவில், 5 மதகுகள் மற்றும் 5 கலிங்குகள் கொண்ட தென்னேரி ஏரி 32 கிராமங்களில் உள்ள சுமார் 2300 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதாவது 5858 ஏக்கர் நீர் பாசனம் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய விவசாயப் பாசனக் கால்வாய்களில் ஒன்று தென்னேரி அடுத்த அகரம் கிராமத்தில் பாயத் தொடங்கி உள்ளாவூர் வரை நீண்டுள்ளது.
தாதசமுத்திரம்:
ஏரியின் கரையில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பலகைக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டில் ஏரியின் பெயர் தாதசமுத்திரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கிபி 1635-இல் சார்வரி ஆண்டு மார்கழி மாதத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்படும் ஏரியின் உடைப்புக்கு மஹாலட்சுமியின் அருளால் 23 மதகுகள் கட்டியதுடன், முதல் மதகிற்கு இரண்டாம் வேங்கடன் என்ற விஜயநகர மன்னன் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த செய்தியும் அக் கல்வெட்டில் காணப்படுகிறது.
ஏரி காக்கும் தெய்வங்கள்:
நீர் செல்லும் வழிக்கு மேலே மஹாலட்சுமியின் புடைப்பு சிற்பம் உள்ளது. ஏரி நீர் இலகுவாக வெளியேற வளைவான அமைப்பில் கற்களால் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லினை இரண்டு சிம்மங்கள் தாங்கியிருப்பது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஏரி நிரம்பிய பின் வெளியேறும் கலங்கில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சங்க காலம் தொட்டு இன்று வரை நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் பேணிக் காத்த நீர்நிலைகளை போற்றிப் பாதுகாப்போம்.