நள்ளிரவில் உத்திரமேரூரில் வெளுத்து வாங்கிய கனமழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உத்திரமேரூரில் அதிகபட்சமாக 169 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழக முழுவதும் துவங்கும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வரும் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மூன்று தினங்களுக்கு முன் அறிவித்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கடந்த 12 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 253 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 264 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 387 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 178 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 348 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 413 மில்லி மீட்டர் என மொத்தம் 1844 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 40 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 32 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 169 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 17 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 61 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள 381 ஏரிகளில் 64 ஏரிகள் முழு கொள்ளளவையும் , 36 ஏரிகள் 75 சதவீதத்தையும், 147 ஏரிகள் 50 சதவீதத்தையும் தாண்டி உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுப்பகுதிகளில் கன மழை பெய்வதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்ட உயரம் 20.50 அடியும், நீர் வரத்து 2187 கன அடியும், நீர் வெளியேற்றம் 1000 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2928 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது
தொடர்ந்து நீர் வெளியேறி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் எனவும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 20 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று அதிகபட்சமாக உத்தரமேரூரில் 169 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. நேற்று மாலை முதலே உத்திரமேரூர் பகுதியில் கன மழை தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.
அதிகாலை முதலே காஞ்சிபுரம் , வாலாஜாபாத் பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.