உத்தரமேரூர் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு
உத்திரமேரூர் அருகே 5 ஏக்கர் அரசு மேய்கால் நிலத்தனை வருவாய் கோட்டாட்சியர் மீட்டார்.;
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் அடுத்த காட்டாங்குளம் இக்கிராமத்தில் சர்வே எண் 197/2aல் சுமார் 20ஏக்கர் மேய்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர் 5 ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட தொடங்கி உள்ளதாக காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி சம்பவ இடத்தில் இன்று வருவாய்த்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை உறுதி செய்தபின், ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கிராம பொது மக்களுக்கு அரசின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். வருவாய்த் துறையினருக்கு அப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.