ஊத்துக்காடு கிராமத்தில் சதிக்கல், கல்வெட்டு கண்டுபிடிப்பு
வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காடு கிராமத்தில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் சதிக்கல், கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் ஆலயத்தில் சதிக்கல் ஒன்றும், கல்வெட்டு ஒன்றும் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே சிதிலமைடைந்த நிலையில் பெரியநாயகி உடனுறை பெரியாண்டவர் கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்ததை பக்தர்கள் சிலர் செப்பனிட்டு கட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் கும்பாபிஷேகம் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார், மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் இவ்வாலயத்தில் வித்தியாசமான சிலை இருப்பதை அறிந்து ஆய்வு செய்தனர்.
அப்போது பெரியாண்டவர் சன்னதிக்கு எதிரே பலி பீடத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அச் சிலையானது ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வணங்கும் நிலையில் அமைக்கப்பட்ட சதி கல் என கண்டறியப்பட்டது.
இந்த சதிகல்லில் உள்ள ஆண் சிற்பத்தின் இடுப்பில் குறுவாளும், கழுத்தில் ஆபரணங்கள், காதில் குண்டலங்கள் மற்றும் கொண்டைத் தலையுடன் உள்ளவாறும், பெண் உருவத்தில் இடது புறத்தில் கொண்டை, கழுத்தில் ஆபரணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சதிகல் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் இவ்வலாயத்தை தொடர் ஆய்வு செய்தபோது பெரியாண்டவர் கருவறைக்கு பின்புறம் தரையில் கிடை மட்டமாக உள்ள ஒரு பாறையில் கல்வெட்டு செய்தி இடம் பெற்று இருப்பதை கண்டறிந்தனர்.
கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் விவரம்:
1. ராட்சத வருஷம்
2. தையி (மாதம்) முதல்
3. தேதி ஆன(ந்த) செட்டி (பெயர் சிதைவுடைந்துள்ளது)
4. சாதா செ
5. ர்வை.
அதாவது ராட்சத வருடம் தை மாதம் முதல் தேதியன்று ஆன(ந்த) செட்டி என்பவர் செய்துள்ள தானத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சிதைவடைந்துள்ளது.
இக்களப்பணிக்கு வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் அவர்கள் அளித்த தகவலின் பேரில் கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் துறை உதவி கல்வெட்டாய்வாளர் நாகராஜன், சிலைகளை ஆய்வு செய்த உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இக்களப்பணியில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய செயலாளர் மோகனகிருஷ்ணன், வரலாற்று ஆர்வலர் யஷ்வந்த்குமார் ஆகியோரும் களப்பணியில் உடனிருந்தனர்.
வாலாஜாபாத் அடுத்துள்ள இந்த ஊத்துக்காடு கிராமத்தில் வரலாற்று சின்னங்கள் கல்வெட்டுக்கள் அதிகளவில் பொதிந்து காணப்படுகிறது. நீர் நிலையை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக தன் தலையை தானே கொய்து கொண்ட இளைஞன் பற்றிய கல்வெட்டு செய்தியை சமீபத்தில் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.
அதேபோல் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கிபி 968 ஆம் ஆண்டு விஜய கம்பவர்ம மன்னரது கல்வெட்டு காணப்படுகிறது. சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் இராஜராஜன் ஆகியோரது கல்வெட்டுக்களும் இவ்ஊரில் உள்ளன.நடுகற்கலும் நிறைந்து காணப்படுகிறது.
மேலும் இங்கு ஒரு கோட்டை இருந்ததற்கான தடயங்களும் காணப்படுகிறது. இப்பகுதி இன்றும் இங்குள்ளவர்களால் கோட்டைமேடு என்றே அழைக்கப்படுகின்றது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பொக்கிஷமாக விளங்கும் ஊத்துகாடு மற்றும் சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை உரிய முறையில் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என ஆய்வு மையத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.