அரசு நிலத்தை போக்குவரத்துக்கு தனியார் பயன்படுத்த ஊராட்சிக்கு லஞ்சமா ?
வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் பகுதியில் உள்ள அரசு மேக்கால் புறம்போக்கு நிலம் வழியாக கிரஷர் ஆலைக்கு வாகனங்கள் சென்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகரல் , வாலாஜாபாத், திருமுக்கூடல் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகளில் செயல்பட்டு கல் அரவை நிலையம் மூலம் பொருட்கள் தயார் செய்யப்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்டிட மூலப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் , தம்மனூர் பகுதியில் சென்னையைச் சேர்ந்த நபர் அரசு அனுமதி பெற்று கல் அரவை நிலையம் நடத்தி வருகிறார். இப்பகுதிக்கு செல்ல அரசு மேய்க்கால் புறம்போக்கு வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் தம்மனூர் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தன்னுடைய தேவைக்கான பொருட்கள் வாங்க கிரஷருக்கு சென்றபோது பொருட்கள் குறைந்த விலையில் தர நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் இரு தரப்பிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்ட போது, கிராம ஊராட்சிக்கு வாகனங்கள் செல்ல பணம் தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த விஷயம் கிராமத்தில் பரவ ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தான் பணம் பெற்றது உண்மை என்றால் நிர்வாகம் எப்போது தந்தது யாருடன் இருந்தார்கள் என்பதை பொதுமக்கள் முன்னிலையில் விளக்க வேண்டும் எனவும் கூறி, இன்று காலை அப்பகுதியினை அப்பகுதி கிராம மக்கள் தடை செய்து கிரஷர் ஆலைக்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையை துண்டித்தனர்.
அதன் பிறகு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானமாக கலைந்து சென்றதாகவும் அதன்பின் துண்டிக்கப்பட்ட சாலையை கிரஷர் ஊழியர்கள் சீர் செய்ததும் தெரியவந்தது.
அரசு மேய்க்கால் நிலத்தில் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் செல்ல பணம் அளித்ததாக கூறியது குறித்து காவல்துறை அல்லது வட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் கிராம ஊராட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இதனைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கிராம ஊராட்சிக்கு லஞ்சம் அளிப்பது முறையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது