தாய் படிக்க கூறி வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தோட்டக்கார தெருவில் வசித்து வருபவர் பானு. இவருக்கு ஒரே மகள் பெயர் பாக்கியலட்சுமி (வயது 14.). பானுவின் கணவர் கணேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பானுவும் பாக்கியலட்சுமியும் பானுவின் சகோதரர் வீட்டின் மாடியில் வசித்து வந்துள்ளனர்.
தற்போது பாக்கியலட்சுமி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹயக்ரீவ வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று பாக்கியலட்சுமி வீட்டில் இறந்து விட்டதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விரைந்து சென்று பாக்கியலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியலட்சுமி இன்று பள்ளிக்கு சென்று வந்தவுடன் சிறிது நேரத்தில் பாத்ரூம் சென்றதாகவும் அங்கு மயங்கி உயிரிழந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பாக்கியலட்சுமியின் தாயார் பானு மற்றும் அவரது உறவினர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் படிப்பில் தொடர் கவனக்குறைவாக இருப்பதாக பாக்கியலட்சுமியை திட்டினேன். அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் என்று பாக்கியலட்சுமி தாய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.