ஸ்ரீபெரும்புதூர் : 5 மணி நேரமாக 100 போலீசார் தேடியும் சிக்காத வழிப்பறிக் கொள்ளையர்கள்
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே தப்பி ஓடி ஏரிக்குள் பதுங்கிய வழிப்பறி திருடர்களை 5 மணி நேரம் 100 போலீசார் தேடியும் பிடிக்க முடியவில்லை.;
ஏரிக்குள் பதுங்கிய வழிப்பறிக் கொள்ளையர்களை தேடும் போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கல்லேரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி .இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் சுங்கச்சாவடியில் ஹவுஸ் கீப்பர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இன்று இவர் பணிக்கு வரும்போது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்ப முயன்றனர்.
அப்போது இந்திராணி கூச்சல் போட்டதால் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் பொதுமக்கள் அவர்கள் இருவரையும் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
இந்நிலையில் அங்குள்ள ஏரி பகுதியில் நுழைந்து தப்ப முயன்ற போது பொதுமக்கள் வருவதைக் கண்டு கையில் இருந்த துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதால் பொதுமக்கள் பயம் காரணமாக நின்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த மர்ம நபர்கள் இருவரும் ஏறி வனப்பகுதிக்குள் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காஞ்சி சரக மண்டல காவல்துறைத் துணை தலைவர் உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதியை சுற்றி வளைத்து கடந்த ஐந்து மணிநேரமாக தேடி வருகின்றனர்.
அந்த வாலிபர்கள் துப்பாக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் கூறியதால் காவல்துறை பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.