செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றம்: கலெக்டர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகளும் நிரம்பியுள்ளதால் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகில் இரண்டாவது ஷட்டர் வழியாக 100 கன அடி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. நீர் வெளியேற்றுவதற்கு முன்பாக பூஜைகள் செய்யப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலியும் எழுப்பட்டது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.75 அடியாகவும், நீர்வரத்து 800 கன அடியாகவும், மொத்த கொள்ளவு 2764 மில்லியன் கன அடியாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாக வந்த தகவலையடுத்து அதனை காண அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு அதிகளவில் திரண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அங்கிருந்த பொதுமக்களை விரட்டி விட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், உபரிநீர் திறப்பதை ஒட்டி திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அளித்த பேட்டி விவரம் வருமாறு:
செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 20.75 அடி உயரம் உள்ளது. மாவட்டம் முழுவதும் கண்காணிக்க 21 மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. 11 துறை அதிகாரிகள் அந்த குழுவில் இருப்பார்கள். 72 இடங்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு 13 இடங்கள் என தெரிந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் 24 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளது. மேலும், 24 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டி நிரம்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்னும் இரு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதாலும் அணைக்கு அதிகளவு நீர் வரத்து இருப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.