காஞ்சிபுரம் - உத்திரமேரூர் மாநில சாலையில் வாகன வேகம் கணக்கிடும் கருவி அமைப்பு
வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் வாகனத்தின் வேகம், நாள், நேரம், வாகனத்தின் திசை உள்ளிட்டவை பதிவாவதால் காவல்துறைக்கு பெரிதும் உதவும்.
நாட்டில் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில், உலகளவில் சாலை விபத்தில் உயிரழப்போர் எண்ணிக்கையில் முதலிடத்திலும் காயமடைவோரில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துக்கள் நடப்பதோடு நான்கு நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்.
பழுதான சாலைகள் , கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, கண்கள் கூசும் முகப்பு விளக்குகள் , வேகத்தடைகள் இருப்பது பற்றி அறியாமை, வாகனங்களில் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சாலை ஓரம் பழுதாகி நிற்கும் வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது.
ஆனால் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக உள்ளது.
இந்நிலையில் மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு அமலாக்கம் தொடர்பான விதி 167ஏ குறித்த அறிவிப்பை G.S.R. 575(E), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த 2020ல் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த விதிகள், மின்னணு அமலாக்க கருவிகளை (வேகத்தை கண்காணிக்கும் கேமிரா, சிசிடிவி கேமிரா, வேகத்தை அளவிடும் சாதனம், உடலில் அணியும் கேமிரா, அறிவிப்பு பலகை கேமிரா, நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கருவி (ANPR), எடைபார்க்கும் கருவி, மற்றும் இதர தொழில்நுட்ப சாதனங்கள்) அமைக்கும் விரிவான ஏற்பாடுகளை இந்த விதிமுறைகள் குறிக்கின்றன.
மின்னணு அமலாக்க கருவிகள், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 132 நகரங்கள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகம் உள்ள நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொருத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் இந்த மின்னணு கண்காணிப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என வழிகாட்டியது.
அவ்வகையில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் கீழ்ரோடு சாலையில் மேல்பேரமநல்லூர் பகுதியில் சாலை இருபுறமும் வாகன வேகம் கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
சோலாரின் மூலம் இயங்க இது அமைக்கபட்டூள்ளது. துல்லியமான பதிவுகள் செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கேமரா அதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் செல்லும் வாகனங்களில் நேரம் மற்றும் தேதி , வாகனத்தின் சரியான வேகம், வாகனம் செல்லும் திசை குறித்த துல்லிய விவரங்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை அடிப்படையில் வேக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் எனவும் அதை மீறும் வாகனங்கள் குறித்த தகவல்கள் அதில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு மின் குறுஞ்செய்தியகா அனுப்பப்படும்.
இச் சாலை வழியாக செல்லும் வாகனத்தின் இரு புகைப்படங்களை சேமிக்கும். வாகனத்தின் முழு படம் மற்றும் வாகன பதிவு குறித்த புகைப்படம் இதில் இடம்பெறும்.
மிதவேகம் ஆபத்தை விளைவிக்காது என்பதை கருத்தில் கொண்டு, சரியான வேகக்கட்டுப்பாட்டு, சாலை விதிகளை கடைபிடித்து சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்பது இதன் நோக்கமாக உள்ளது.