பிரதமர் மோடியின் திட்டங்களை பெறுவது எப்படி: வழிகாட்டுகிறது பாஜக
பிரதமர் மோடியின் திட்டங்களை வணிகர்கள் பெறுவது குறித்து பா.ஜ.கவின் வழிகாட்டுதல் ஆலோசனை கருத்தரங்கு தேனியில் நடைபெற்றது.
தமிழக பா.ஜ.க வில் 23 அணிப்பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு அணிப்பிரிவு சார்ந்த துறைகளின் சார்பில், பிரதமர் மோடி என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்த திட்டங்களை பெறுவது எப்படி என்பது குறித்து பா.ஜ.க வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு அணிப்பிரிவு சார்பிலும், மாவட்டந்தோறும், (அதாவது பா.ஜ.க விற்கு தமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் உள்ளன) கருத்தரங்குகள் நடந்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் அந்தந்த அணிப்பிரிவு தலைவர்களின் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை மற்றும் அவர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தேனி மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை மற்றும் நலத்திட்டங்களின் வணிகர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. வணிகப்பிரிவின் மாநில செயலாளர் நாராயணசாமி கருத்தரங்கிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
தேனி மாவட்ட தலைவர் பி.சி. பாண்டியன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார், மதுரை புறநகர் வர்த்தக பிரிவு தலைவர் பாபுராஜா, தேனி மாவட்ட வர்த்தக பிரிவின் துணைத்தலைவர்கள் பெரியசாமி, வினோத்குமார். செயலாளர்கள் எம்.எஸ். ராஜேந்திரன், சென்ராயல், செல்வம், மணிகன்டன், துரைசிங்கம், சுரேஷ், தண்டபாணி, தேனி நகர் வர்த்தக பிரிவின் தலைவர் ஆர்.பி. ரமேஷ் மற்றும் அனைத்து மண்டல் நிர்வாகிகள், ஐநுாறுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், ஆடிட்டர் சிவகுரு ஆகியோர் மோடி அரசின் திட்டங்கள், அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினர். தனித்தனியே வழிகாட்டுதல் தேவைப்படுபவர்களுக்கு தனித்தனி வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் வணிகர்களுக்கான சிறப்பு கடன் சேவை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களுக்கு எந்த வகையான கடன் சேவை தேவை என்பது குறித்து தங்களது விண்ணப்பங்களை வழங்கினர். பா.ஜ.,வின் வர்த்தக அணிப்பிரிவு நடத்திய இந்த நான்கு மணி நேர வழிகாட்டுதல் கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது மிகப்பெரிய சாதனையான விஷயம் என கட்சி மேலிடம் பாராட்டு தெரிவித்துள்ளது என தேனி மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.