வங்கக்கடலில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு: உற்சாகத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தடைக்காலம் முடிவுற்றதால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சென்னை காசிமேடு துறைமுகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என பல்வேறு கடல்சார் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட தையடுத்து இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி வீணாகுவதோடு படிப்படியாக மீன்வளமும் வெகுவாகக் குறையும் என்ற ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடந்த 2000-ஆண்டில் 45 நாள்களாக இருந்த தடைக்காலம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தடை காலம் 61 நாள்களாக நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டி ருந்தது.
இந்த ஆண்டும் வழக்கம் போல் வங்கக் கடலையொட்டிய கிழக்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் தடைக்காலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது மேலும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர் நல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1.60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ல் இத்தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதி புதன்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்.
தயார் நிலையில் விசைப்படகுகள்:
தமிழகம் முழுவதும் சுமார் 6,500 விசைப்படகுகள் உள்ளன. இதில் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் உள்ளன. தடைகாலத்தையொட்டி விசைப் படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய ஐஸ் கட்டிகளை இயந்திரங்கள் மூலம் உடைத்து தூளாக்கி படகுகளில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் நிரப்பிய மீனவர்கள் ஒரு வார பயணத்திற்கான மளிகை சாமான்கள், உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கி படகுகளில் ஏற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காசிமேடு துறைமுக மீன்பிடித் தொழிலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் தொழிலாளர் கள் விசைப்படகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதில் பெரும்பாலானவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கடந்த சில நாள்களாக காசிமேடு துறைமுகத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். எனவே இரண்டு மாதங்களுக்குப் பிறகு சென்னை காசிமேடு துறைமுகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.
மீன் விலை குறையுமா…
புதன்கிழமை நள்ளிரவு முதல் கடலுக்குச் செல்லும் விசைப் படகுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். முதல் நாளில் சுமார் 200 விசைப் படகுகள் கடலுக்குச் செல்கிறனர். இவர்கள் சுமார் குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் முதல் 15 நாள்கள்வரை கடலில் மீன்பிடித்து விட்டு பிடிபடும் மீன்களின் அளவுக்கு ஏற்ப படிப்படியாக கரை திரும்புவார்கள்.
வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்ட வைகள் பெரும்பாலும் விசைப்படகுகள் மூலம் தான் கிடைக்கின்றன. எனவே ஒரு வாரத்திற்குள் மீன்வரத்து அதிகரித்து படிப்படியாக மீன் விலை குறையும் என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.