புகையிலை பொருட்கள் விற்பனை பெண் உட்பட இருவர் கைது!
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.;
ஈரோடு : அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கே.ஏ.எஸ்.நகர் முதல் வீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த அனிதா (42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 117 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, கடத்தூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், காராப்பாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் அருணாச்சலம் (61) என்பவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 285 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.