நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 66 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறைகளில் பணியாற்ற உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும்படையினர் 3 சுழற்சி முறைகளில் பணியாற்ற உள்ளதாகவும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
பறக்கும் படையினர் இன்று முதல் தங்களது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஜவுளி வியாபாரிகள் தினமும் பல்வேறு வேலூர் மாவட்டம் வெளிமாநிலங்களுக்கு சென்று அதிக அளவு பணத்தைக் கொண்டு வருவது வழக்கம். தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆவணங்களை பறக்கும் படையினரிடம் காட்ட வேண்டும் சூழ்நிலையில் உள்ளனர்.