தனியார் பிளீச்சிங் பட்டறையிலிருந்து கழிவுநீர் கசிவு
தனியார் பிளீச்சிங் பட்டறையில் ஏற்பட்ட கசிவால்,ஆயிரக் கணக்கான லிட்டர் பிளீச்சிங் கழிவுநீர் கசியத் தொடங்கியது;
ஈரோடு பவானி சாலையில் பிளீச்சிங் கழிவுநீர் கசிவு – சாலை முழுவதும் கெமிக்கல் பரவலால், பொதுமக்கள் கடும் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் பவானி சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு ஓடை அருகிலிருந்து மரவாபாளையம் நோக்கி செல்லும் சாலையில், ஒரு தனியார் பிளீச்சிங் பட்டறை இயங்கி வருகிறது. இந்த பட்டறையில் துணிகளை பிளீச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆழமான கெமிக்கல் கழிவுகள், சரியான முறையில் சுத்திகரிக்கப்படாமல் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று காலை அந்த தொட்டிகளில் ஏற்பட்ட கசிவால், ஆயிரக் கணக்கான லிட்டர் பிளீச்சிங் கழிவுநீர் வெளிநோக்கி கசியத் தொடங்கியது. இளம் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருந்த அந்த கெமிக்கல் கழிவுகள், சாலைகளில் பெருகி ஓடியதால், அந்த பாதையில் வாகன போக்குவரத்து முடங்கி விழுந்தது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பகுதி மக்களின் புகாரை தொடர்ந்து, ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.தீனா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள், "இந்த பட்டறையில் இருந்து தொடர்ந்து தூர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை கட்டுப்பாடின்றி வெளியேற்றுவது நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது" என அதிகாரிகளிடம் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.
இந்த சம்பவம், சுற்றுச்சூழலுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.