போராட்டத்தில் திரண்ட அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உதாசினம் செய்ததுடன் மனுவை நிராகரித்தனர்;
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை செயலாளர் சந்திரமவுலி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சா மீது கடும் கண்டனம் தெரிவித்தனர். காரணம், ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைக்க சென்றபோது, அவர்களின் மனுவை மதிப்பின்றி குப்பை தொட்டியில் வீசியதோடு, நிர்வாகிகள் மீது புகார்கள் எழுப்பி, கைது நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், சம்பவ இடத்தில் இருந்த அரசு ஊழியர்களின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்ற அதிகார வர்க்க அழுத்தங்களை எதிர்த்து, ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அலுவலகத்தில் முறையான நிர்வாக ஒழுங்குமுறைகளை வகுத்து, ஊழியர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்டம் முழுவதும், 10 தாலுகா அலுவலகங்களின் முன்பு ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அரசு ஊழியர்கள், அவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று என்பதால், இந்த போராட்டம் ஊழியர்களின் நலன் கருதி தொடந்துச்செல்லும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.