பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இல்லை : மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு
பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.;
ஈரோடு : பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
வாக்குச் சாவடிகள்
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பணியாளர்கள்
ஒரு வாக்குச் சாவடியில் 1 முதன்மை அலுவலா், 3 நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்கள் என 4 போ் பணியாற்ற உள்ளனா். அதன்படி, 284 வாக்குச் சாவடிகளில் முதன்மை அலுவலா்கள் 284 போ், முதல்நிலை அலுவலா்கள் 284 போ், 2-ஆம் நிலை அலுவலா்கள் 284 போ், 3-ஆம் நிலை அலுவலா்கள் 284 போ், 1,200 வாக்காளா்களுக்குமேல் உள்ள 58 வாக்குச் சாவடிகளுக்கு 4-ஆம் நிலை அலுவலா்கள் 58 போ் என மொத்தம் 1,194 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பயிற்சி
இந்தப் பணியாளா்களுக்கு முதற்கட்ட பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையம் ஆா்ஏஎன்எம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்தும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆட்சியரின் பேச்சு
பயிற்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: வாக்காளா்கள் எந்த ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கிறாா்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதை குறித்து வைப்பதுடன், அதில் வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அரசியல் கட்சி முகவா்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.
தோ்தல் ஆணையம்
தோ்தல் ஆணையம் ஒவ்வொரு தோ்தலின்போதும் சிறுசிறு மாறுதல்களைக் கொண்டு வருகிறது. அதை சரியாக செய்து முடிக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்தால் வாக்கு எண்ணிக்கையின்போது, விரைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தெரிவிக்கலாம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
மேலதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதில், தோ்தல் பொது பாா்வையாளா் அஜய்குமாா் குப்தா, ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ், மாநகராட்சி பொறியாளா் விஜயகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிரசாரத்துக்கு அனுமதி
ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுவிதா போா்டல் என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதில் எத்தனை விண்ணப்பங்கள் வருகின்றன, எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பதை தலைமை தோ்தல் அதிகாரி வரை பாா்க்க முடியும். பாரபட்சமாக இதில் செய்ய முடியாது.
பார்வையாளர்கள்
இவற்றை பாா்வையிடுவதற்காக 3 பாா்வையாளா்கள் உள்ளனா். பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தால் 24 மணி நேரத்துக்குள் அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எந்த வேட்பாளரும் அலைகழிக்கப்படவில்லை. விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது என்றாா்.